கட்டுரைகள் | அரசியல் | 2019-07-10 00:25:58

கல்முனைக்காக இரவுகளில் பள்ளிகளில் தவமிருக்கும் ஹரீஸ் : தேன்மிட்டாய் சுவைக்குமா தமிழ் தரப்பு ? - ஹக்கீம் உதவினால் சரி !!


நூருல் ஹுதா உமர்


சமீபத்தைய நாட்களில் இலங்கை அரசியலின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியிருக்கும் சில முக்கிய பிரச்சினைகளில் முதன்மையான ஒன்றாக மாறியிருக்கும் கல்முனை போராட்டம் முழு நீள திரைப்படமாக இலங்கை அரசியல் எனும் திரைக்கு வெளியாக காத்திருக்கிறது. முப்பது நாளில் தீர்வு எனும் தற்காலிய சாம்பாரில் ரசமிருந்தாலும் உப்பு இல்லை என்பதை இன்னும் சில நாளில் வெளியாக இருக்கும் அந்த திரைக்காவியம் அச்சொட்டாக காட்டும் என்பதில் மாற்று கதைகளுக்கு இடமில்லை. 

பல தீவிர,கடும் போக்குவாத தேரர்களின் வருகையால் இடைவேளை வரை அந்த திரைப்படம் மிக உச்சகட்ட கிளைமேக்ஸ் காட்சிகளுடன் நிறுத்தப்பட்டது. அத்துரலிய ரத்ன தேரர், பொதுபலசேனாவின் சிங்கம், விடுதலை புலிகளின் தளபதி கருணா, மொட்டின் புதிய மொட்டு வியாழேந்திரன், கில்லாடி கோடிஸ்வரன், ராஜதந்திரி சுமந்திரன், ஆக்சன் கிங் மனோ என முக்கிய பலரும் இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருந்தாலும் குணசித்திர நடிகராக கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல தேரர் புதிதாக  அறிமுகமாகியிருக்கிறார்.

சத்தியாகிரகம் எனும் பந்தலில் நான்கு நாளாக திருவிழாக்கோலம் கொண்டு ஒட்டுமொத்த சதிகளையும் முறியடிக்க அம்பாறையில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் களம் கண்டனர். சகல காங்கிரஸினதும் முக்கிய புள்ளிகள் பேதம் மறந்து உம்மத்துக்காக ஒற்றுமையான வில்லன்களாக நிற்க. முஸ்லிங்களிடம் ஹீரோவானார்கள். 

கல்முனை முஸ்லிங்களின் தாயகம், தமிழ் உறவுகளுக்கு பல முக்கியமான நகரங்கள் இருந்தாலும் கல்முனை முஸ்லிங்களினால் பல நூறு வருட உழைப்பால் உருவான தாயகம் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டாலும் வாக்குக்காக விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பதை சிறுவனும் நன்றாக அறிவான். 

கல்முனை மண்ணில் பிறந்து, வாழ்ந்து கல்முனைக்காக எப்போதும் போராட்டம் செய்ய முன் நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தமிழ் கூட்டமைப்புக்கு முதல் வில்லனாக இருக்கிறார். அரசியலில் ஹரீஸுக்கு எலியும் பூனையுமாக இருக்கும் ஜவாத், அதாவுல்லாஹ் என பலரும் பந்தலுக்கு வந்து பேச முஸ்லிங்களின் நிலை தெளிவு பெற்ற நிகழ்வாக அது மாற்றம் பெறுகிறது. உரைகளை காது கொடுத்து கேட்க மறுத்த கல்முனை மக்கள் அதாவுல்லாஹ்வின் ஒரு மணித்தியாலயத்துக்கு மேற்பட்ட உரையை அமைதியாக  இருந்து ரசித்து,கர ஒலி எழுப்பி கேட்கும் அளவுக்கு முக்கிய நிகழ்வாக அந்த சத்தியாகிரக பந்தல் மாற்றம் பெற்றிருந்தது. 

 புத்திசாலி என எதிரியும் புகழாரம் சூட்டும் அளவுக்கு திறமையான சுமந்திரன் அரசின் செய்தியை சுமந்துகொண்டு தயாவின் ஹெலியில் மனோவோடு வந்தார். அவரை அவமானத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தாக்கி, கூச்சலிட்டு வெளியேற்றிவிட்டு இனவாதத்தின் பேரரரசன் என பேர் வாங்கிய பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் அமுத வாக்குறுதியை நம்பி கைவிட்ட உண்ணாவிரதம், பின்னர் சத்தியாகிரகமாகி ஒரு மாத கால விடுமுறையுடன் இடைவேளைக்கு நகர்ந்தது அந்த படம். பொலிஸாரின் இனிப்பான செய்தி வந்தவுடன் இறைவனுக்கும் எல்லோருக்கும் நன்றி சொல்லி இந்த பிரச்சினையை பற்றிய ஆழமான கருத்துக்களுடன் துஆ செய்து முஸ்லிங்களும் பந்தலை பிரிக்கிறார்கள். 

அப்போது பேசிய ஊரின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பி இந்த பிரச்சினை "தர்மத்தின் மானத்தை அதர்மம் வெல்லத்துடிக்கிறது - சத்தியம் நித்தியம் வெல்லும்" இந்த பிரச்சினையை தேசியமயப்படுத்தி முஸ்லிங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவை உண்டாக்கி தேசத்தின் அபிமானிகளான முஸ்லிம் மக்களின் நியாயத்தை நாட்டுக்கு உரக்க சொல்வதாக ஊடகங்களிடம் உணர்வுடன்  சொன்னார். 

வாய்வார்த்தையாக மட்டுமில்லாது கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், கல்முனையின் இதயத்தை பாதுகாக்க துடிப்போர் என பலரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு முக்கிய பல பள்ளிவாசல்களை நோக்கி மக்களை சந்திக்க பறக்கிறார். 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து சம்மாந்துறை மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முதன்முதலாக (29/06/2019) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை மசூறா சபைத் தலைவர் ஏ.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

 பின்னர் பிரதேச சபை உறுப்பினர்களினதும், கல்குடா தொகுதி மக்களினதும் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறியும் சந்திப்பு (05/07/2019) அன்று வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடியில் அமைப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற போதும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை ஆழமாக பேசுகிறார். அடுத்த நாள் சனிக்கிழமை பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தலைவர் வைத்தியர் எம்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எச்.எம். எம். ஹரீஸ் அவர்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஸீத், சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், டாக்டர் எஸ்.கபீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ மஜீட், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரச்சினை பற்றிய ஆராய்வை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தெரண தொலைக்காட்சி 360 எனும் அரசியல் நிகழ்ச்சியிலும் கல்முனை விவகாரத்தை மிக அழகாக,ஆழமாக பேசி சிங்கள மக்களுக்கும் இந்த பிரச்சினையின் சரியான முகங்களை தெளிவாக விளக்கினார். 

ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த ஹரீஸ் தலைமையிலான அந்த அணி அடுத்த நாளே (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஹனூன் (ஜுனைத்தீன்) தலைமையில் விளக்கமளிக்கும் கூட்டத்தை நடத்துகிறது. 

இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்,கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மக்களை சந்தித்து விளக்கமளிக்கும் சகல மக்கள் சந்திப்புக்களிலும் கல்முனை பிரதேச விவகாரம் சம்மந்தமாகவும், கடந்த கால வரலாறுகளையும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் நிசாம் அவர்களினால் மிக உணர்வுபூர்வமாக விளக்கமளிக்கப்பட்டது இங்கு கூடுதல் பலமாக அமைகிறது. அம்பாறை மாவட்டத்தை தாண்டி, கிழக்கிலும் மற்றும் நாடுபூராகவும் மக்களை சந்தித்து விளக்கமளிக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் பட்டியலின் நீளம் பெரிதாக இருக்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

அப்படியான சந்திப்புக்களை தாண்டி  ஹரீஸ் எம்.பி கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அங்கெல்லாம் கல்முனையை பற்றி பேசாமல் மைக்கை வைப்பதில்லை என்றாகிட்டு. ஸாஹிரா கல்லூரியில் அவர் பேசிய வரலாற்று முக்கியத்துமிக்க அந்த உரையில் பல வருடங்களாக புதைந்து கிடந்த மர்மங்கள் வெளியாகியது. அந்த உரையில் அவர் அரசியல்வாதி எனும் எல்லைக்கு வெளியே நின்று இறைவனுக்கு பயந்து நின்ற நிமிடங்கள் கண்களை அகல திறக்கும் நிமிடங்களே.

கல்முனையை பாதுகாக்க குதிரை வேகத்தில் ஹரீஸ் பயணித்துக்கொண்டிருக்கும் போது அரசாங்கத்தை பதவிவிலக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்தை நோக்கி வர தமிழர்களுக்கு தேன்மிட்டாய் கிடைத்தாற் போலாகிட்டு. அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் வாக்குகளும் வேண்டும் தமிழ் வாக்குகளும் வேண்டும். தலைமேல் கைவைத்து காத்திருக்கும் அரசுக்கு இருதரப்பும் தடைக்கல்லாக வைத்தது கல்முனை மண்ணையே. 

செய்வதறியாது இங்கிலாந்து மண்ணில் எதிராணிகளுடனும், மழையுடனும் போராடிய இலங்கை கிரிக்கட் அணிபோல திணறி இருக்கும் அரசின் தலைவர்களை பகிரங்கமாக விரல் நீட்டிய ஹரீஸ் உட்பட 20 எம்.பிக்கள் கல்முனையை பாதுகாக்க முஸ்லிங்களுக்கு இருக்கிறார்கள் என்பது பெரும் ஆறுதல். 

இன்று கல்முனை உப செயலகத்தில் கணக்காளர் பதவியேற்றதாக செய்திகள் வந்தபோது அரசின் நாளைய நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்திப்போருக்கு விருந்தாக இருந்திருக்கும். அரசின் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட விடயமாக மாறியிருக்கும் இந்த விவகாரத்தை ஹரீஸ் எனும் ஒருவர் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இருப்பதை போல எல்லோரும்  தலையில் தூக்கி சுமக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக நான் பார்க்கிறேன். 

அம்பாறை மு.கா எம்.பிக்கள் ஹரீஸின் தோளை பற்றிப்பிடித்து போராட்ட களத்தில் நிற்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. தமிழ் கூட்டமைப்புடன் நல்ல சிநேகிதம் கொண்டு உறவாடும் மு.கா தலைவர் ஹக்கீம், தமது உறவின் ஆழத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்திருப்பதாக நான் பார்க்கிறேன். றிசாத் எம்.பி தலைமையிலான  அணிக்கும் இது முக்கிய ஒரு சமாச்சாரம் என்பது தெளிவாக உள்ளது. 

இடைவேளையை முடித்துக்கொண்டு இயக்குனர் ஹரியின் திரைப்படங்களை போல இரண்டாம் பாகத்தை நோக்கி இந்த திரைப்படம் வேகமாக நகர்வதை இன்னும் சில நாளில் பார்க்கலாம். ஹீரோக்கள் வில்லனாகவும், வில்லன்கள் ஹீரோவாகவும் மாறலாம். தமிழ் தரப்பில் நடிப்பில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இருப்பதை விட முஸ்லிம் தரப்பிலையே பாண்டித்தியம் பெற்றவர்கள் அதிகம். இருந்தாலும் கல்முனை எங்கள் இதயம் எனும் போராட்டத்தில் வெல்லப்போவது யார் என்பதை மூன்றாம், நான்காம், ஐந்தாம் தரப்புக்கள் தீர்மானித்திருக்கலாம். இருந்தாலும் இயக்குனரை மிஞ்சிய கதையாக இருக்க வாய்ப்பில்லை. ஹீரோவாக இருக்கும் சிலர் காமெடியனாக மாறாமல் இருந்தால் சந்தோசம். 

திரைக்கு வரும் வரை காத்திருப்போம். சிறந்த ஹீரோக்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப !!! 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts