கல்வி | கல்வி | 2019-07-08 18:07:35

விமர்சனங்களுக்கு அப்பால் ஜனாதிபதியின் முடிவு அமுல்படுத்தப்பட வேண்டியது : எச்.எம்.எம்.ஹரீஸ் !!

- அபு ஹின்சா -

அதிகளவிலான பாடசாலை மாணவர்களை குறிவைத்து நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்க போதைப்பொருள் வியாபாரம் செய்ய முயல்பவர்களுக்கு தக்க பாடம் நடத்த எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்திருக்கும் மரண தண்டனை வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் மாணவர்களுடைய சுகாதார சேவையினை மேம்படுத்தும் நோக்கில் பற் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (08)திங்கள்கிழமை பாடசாலை அதிபர் ஏ.எச் அலி அக்பர் தலைமையில் கல்முனை கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில்,

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளினதும் பாதுகாப்பு அவசியமானது. கிழக்கு மாகாணத்தில் கல்வியில் தலைசிறந்த வலயமாக இருக்கும் இந்த பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தை முறியடிப்பதில் கல்முனை பொலிஸாரின் பங்களிப்பு அளப்பரியது.

இந்த நாட்டின் கல்வியை மேம்படுத்த அரசாங்கங்கள் பல திட்டங்களை வகுத்து அமுல்படுத்தி வருகிறது. கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டேப் கணணிகளை வழங்கும் திட்டம் விரைவில் அமுலுக்கு வர இருக்கிறது.

கல்முனை பிரதேசத்தில் சிவில் அமைப்புக்கள், பொலிஸாரின் முயற்சியால் போதை பாவனை வெகுவாக குறைந்து விட்டது. மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தி அவர்கள் விரும்பும் துறைகளில் அவர்களை பிரகாசிக்க வைக்கவேண்டியது அவசியமாகும்.

பல விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் மீது அக்கறை கொண்டு மேற்குலக சதிகளுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் தூக்கு தண்டனையை அமுல்படுத்த முயற்சி எடுத்து போதை பொருள் வியாபாரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி பாராட்டப்படவேண்டியது என்றார்.

இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல் அலாவுத்தீன் அவர்களும், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ்.நிசார்(ஜேபி), மற்றும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுஹுனன், பிராந்திய பற்சிகிச்சை அதிகாரி டாக்டர் எம்.பி அப்துல் வாஜித், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பல் வைத்திய அதிகாரி டாக்டர் கே.எம் லத்தீப், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம் ரிஸ்வின், கல்முனை வலய பிரதி வலயக் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம், கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச் ஜாபீர், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹிட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts