விளையாட்டு | விளையாட்டு | 2019-03-17 17:40:22

ஒலிம்பிக் விளையாட்டுக் கழக சாதனை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 

(ஏ.எல்.எம்.ஷினாஸ், அகமட் எஸ். முகைடீன்)

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் விளையாட்டுக்களில் திறமைகாட்டிய தமது வீரர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு என்பன நேற்று (16) சனிக்கிழமை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம். சிலாயத் நஜிமுடீன் தலைமையில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் புதிய தலைவர் வை.பீ.எம். றியாலுடீன், ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல். சக்காப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.எஸ். உமர் அலி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம். முஸ்தபா, கோல்ட் மைன் விளையாட்டுக் கழக ஸ்தாபகர் ஜமால் முகம்மட், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க செயலாளர் மெரிகோல்ட் இப்றாஹிம், ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும் பொதுச் சுகாதார பரிசேதகருமான நியாஸ் எம். அப்பாஸ், ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரும் பதில் நீதிபதியுமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பதுர்தீன், கழகத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆசிரியர் ஈ.கமால்தீன், ஒலிம்பிக் விளையாட்டுக் கழக பொதுச் செயலாளரும் உடற்கல்வி போதனா ஆசிரியருமான எம்.எல்.ஏ. தாஹிர் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் மற்றும் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   

மருதமுனை ஒலிம் பிக் விளையாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் பூர்தியடைந்துள்ளது. இந்நிலையில் இப்பிராந்தியத்தின் வல்லாண்மை பெற்ற கழகங்களில் ஒன்றாக திகழும் இவ்விளையாட்டுக் கழகத்தின் திறமையான வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இதன்போது நடப்பு ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுக்கான புதிய நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களும் பயனடையும்வகையில்  இப்பிரதேசத்தில் ஒரு கால்பந்தாட்ட அகடமியினை உருவாக்க வேண்டும் என்பது தனது அவாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார். 

இலங்கையில் வீடமைப்பு திட்டத்தை உருவாக்குவதற்காக இம்மாத இறுதியில் கட்டார் நாட்டு இளவரசர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருவதாக அறிவித்துள்ளதாகவும், அவர்களை இப்பிராந்தியத்திற்கு அழைத்துவருவதற்கான முயற்சிகளை தான் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்ட அவர், அத்தூதுக் குழுவுடன் பேசி இப்பிராந்தியத்தின் நிலையான உதைபந்தாட்ட அபிவிருத்திக்கு வழிவகை செய்ய வேண்டுமென்ற ஆசையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts