ஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2019-01-27 16:26:14

போதைப்பொருள் தடுப்பிற்காக வேலைத்திட்டங்கள் இவ்வாண்டு முதல் புதிய தோற்றத்துடன் நடைமுறைப்படுத்தப்படும்

“போதையிலிருந்து விடுதலையான நாடு” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் “போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு” என்று பெயர்சூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய புகையிரதத்தின் முதலாவது பயணத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றது. 

இப்பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை வரை புகையிரதத்தில் பயணித்தார். 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் தோன்றிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் சமீப காலங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய இன்று முதல் ஆரம்பமாகும் அறநெறிப் பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக இந்த புகையிரதத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

புதிய புகையிரதத்தை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்த ஜனாதிபதி, போதைப்பொருளால் ஏற்படும் தீய பின்விளைவுகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். 

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் தடுப்பிற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் இந்த ஆண்டு முதல் புதிய தோற்றத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை வாழ் மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். 

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முகமாக பயணத்தை ஆரம்பித்த இந்த புகையிரதத்திற்கு “போதையிலிருந்து விடுதலையான நாடு” என்ற பெயர் சூட்டியதற்கான நிகழ்வை உறுதிப்படுத்தும் முகமாக ஜனாதிபதியினால் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டது. 

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த புகையிரதம் இரண்டு எஞ்சின்கள், குளிரூட்டப்பட்ட இரண்டு பெட்டிகள், 2ஆம் வகுப்பை கொண்ட இரண்டு பெட்டிகள் மற்றும் 3ஆம் வகுப்பை கொண்ட ஏழு பெட்டிகளையும் கொண்டதாகும். 

இந்த நிகழ்வுடன் இணைந்தாக அறநெறிப் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தெளிவூட்டும் விசேட நிகழ்வொன்று குருணாகலை புகையிரத நிலையத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர்.சமந்த கிதலவஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts