கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-01-19 08:33:47

பாரம்பரிய கலைகள் ஒரு சமூகத்தின் அடையாளங்களாகும் இலக்கிய விழாவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 2018 ஆம் ஆண்டிற்கான இலக்கிய விழா அண்மையில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,

எமது சமூகத்திற்காக நாம் விட்டுச் செல்லும் ஒவ்வொரு நல்ல விடயங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ”சதக்கதுல் ஜாரியா” (நிரந்தர தர்மம்) ஆகும். கலை இலக்கியங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புகளை செய்கின்றன. சமூக மாற்றத்திற்கு இவைகள் அடிப்படை அம்சங்களாக இருக்கின்றன. உண்மையில் கலை இலக்கியங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். கலை இலக்கியங்கள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்குள் நின்று வெளிப்படுத்தப்படுகின்றனவா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் அல்லது ஒருநாட்டின் பண்பாடு, காலச்சூழலுக்கேற்ப வளரும் தன்மை கொண்டது. இவ்வளர்ச்சிப் பாதையில், பயன்படக்கூடிய, ஒப்புக் கொள்ளப்பட்ட விரும்பத்தக்க, சமுதாயத்திற்கேற்ற, தேவையான கூறுகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவைகள் காலப்போக்கில் விலக்கப்பட்டுவிடும். 

பண்பாடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின்  சமூக பொருளாதார, அரசியல், கலாச்சாரம் அனைத்தையும் பிரதிபலித்து நிற்கின்றன என்பதே உண்மை.  இன்று இளைஞர்கள் பலர் கலை கலாசார நிகழ்வுகளில் பங்கு பற்றியிருந்தமை பாராட்டத்தக்கதாகும். எதிர்கால இளம் சமூகத்தினருக்கு எமது பாரம்பரிய கலைகள் பற்றி அறிவூட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு குறிப்பிட்ட சந்ததிகளோடு சில கலைகள் அழிந்து செல்வதை காணுகின்றோம்.

எமது சமூகத்தின் பாரம்பரிய கலைகள் எமது அடையாளச் சின்னங்களாகும் அவைகள் பாதுக்கப்பட வேண்டும். இத்துறையில் பங்கு பற்றுபவர்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

இங்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசியரீதியாக நடாத்தியிருந்த பாடசாலை மட்ட  இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் சான்றிதழ்கள்  வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களான எஸ்.சிறாஜூத்தீன், ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தீன் கலந்து கொண்டார், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சாத், பிறை எப்.எம்.நிலையக் கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி. அக்கிலா பானு உட்பட கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts