தொழிநுட்பம் | சமூக வாழ்வு | 2019-01-13 16:57:20

விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சமிக்ஞை

தொலைதூர விண்வெளியில் இருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்த மர்மமான ரேடியோ அலைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கனடாவில் உள்ள தொலைதூர நோக்கி ஒன்றின் மூலம் பெறப்பட்டிருக்கும் இந்த ரேடியோ சமிக்ஞைகள் குறித்த விபரம் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்தே இந்த சமிக்ஞை வந்துள்ளது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 இலட்சம் கி.மீ வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்’ எனப்படும். எனவே, விநாடிக்கு 3 இலட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சமிக்ஞை வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீற்றர் நீள அரை உருளை வடிவ அண்டெனாக்கள் உடனடியாக தொடர்ச்சியாக வந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த அண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

“நாம் இன்னும் இந்த மர்மத்தை தீர்க்கவில்லை, ஆனால் மர்ம முடிச்சில் புதிய காய்கள் சேர்கின்றன” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த டொம் லென்டக்கர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக வரும் ரேடியோ வேக அதிர்வுகள் தொடர்பில் விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கோட்பாடுகள் உள்ளன. எனினும் இது தொடர்பான சரியான விபரம் இன்னும் அறியப்படவில்லை. வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரோன் நட்சத்திரங்கள் ஒன்றிணைவது, இராட்சத கருந்துளைகள் அல்லது மேம்பட்ட நாகரிகம் ஒன்றில் இருந்து சமிக்ஞைகள் இந்த ரேடியோ வேக அதிர்வுகளுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான சுமார் 60 சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டபோதும் ஒரு முறை மாத்திரமே இந்நிகழ்வு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த அதிர்வு மிகக் குறுகிய நேரம் கொண்டதாக இருந்தபோதும் சூரியன் 10,000 ஆண்டுகள் வெளிப்படுத்தும் அளவுக்கு சக்தி இதன்போது வெளிப்படுவதாக நம்பப்படுகிறது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts